< Back
மாநில செய்திகள்
தாம்பரம் அருகே பெண் மதபோதகர் கடத்தி கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

தாம்பரம் அருகே பெண் மதபோதகர் கடத்தி கொலை

தினத்தந்தி
|
21 Jun 2022 10:34 AM IST

தாம்பரம் அருகே பெண் மதபோதகர் கடத்தி கொலை செய்யப்பட்டார். அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரது உடல் எலும்பு கூடாக மீட்கப்பட்டது.

பெண் எலும்பு கூடு

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே மதுரபாக்கம் கிராமத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஆடு மேய்க்க சென்றார். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் பெண் ஒருவரது உடல் அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது எலும்பு கூடு கிடந்தது. அதன் தலையில் பாதி முடியும், அருகில் கிழிந்த சேலையும், ஒரு பையும் கிடந்தது. பெண்ணின் எலும்பு கூட்டை போலீசார் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடையாளம் காட்டினார்

மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 8-ந் தேதி அகரம் தென் கிராமத்தைச் சேர்ந்த எஸ்தர்(வயது 55) என்பவர் மாயமானதும், தாயை காணவில்லை என அவரது மகள் ஏஞ்சலின் சேலையூர் போலீசில் புகார் அளித்து இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார், ஏஞ்சலினை அழைத்துச்சென்று பெண்ணின் எலும்பு கூடு அருகே கிடந்த சேலை உள்ளிட்ட பொருட்களை காட்டினர். அதை வைத்து, எலும்பு கூடாக கிடந்தது தனது தாய் எஸ்தர்தான் என்பதை ஏஞ்சலின் அடையாளம் காட்டினார்.

மத போதகர்

எலும்பு கூடாக கிடந்த எஸ்தர், மதபோதகர் ஆவார். கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், எப்படி இந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

எனவே மர்மநபர்கள் யாராவது அவரை கடத்தி கொைல செய்து விட்டு, உடலை அடர்ந்த காட்டுப்பகுதியில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகி்ன்றனர்.

மேலும் செய்திகள்