சேலத்தில் பெண் கொலை: ஆசை வலையில் வீழ்ந்த ஆட்டோ டிரைவர் முதல் பள்ளி டிரைவர் வரை - கள்ளக்காதலா? போலீசார் விசாரணை
|சேலத்தில் பெண் கொலை வழக்கில் ‘ஹெல்மெட்’ அணிந்து கொலையாளி தப்பி ஓடினாரா? என்ற கோணத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர், சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுகுணவள்ளி (40). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
முருகேசன் 4 ரோடு பகுதியில் துணிக்கடையில் வேலை செய்து வருவதால் அவர்கள் பெரமனூர் மாரியம்மன் கோவில் அருகே வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். நேற்று முன்தினம் முருகேசனுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் அவர் மனைவியிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.
இதனிடையே, நேற்று முன்தினம் மதியம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர், சுகுணவள்ளியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, அவர் வீட்டிற்குள் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுகுணவள்ளியின் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த முருகேசன் பதறிஅடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து கொலை செய்யப்பட்ட மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். பள்ளப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுணவள்ளியின் உடலை மீட்டு விசாரித்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? அல்லது குடும்ப பிரச்சினையில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கொலையுண்ட சுகுணவள்ளிக்கும், ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சுகுணவள்ளியின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை தொடர்பாக புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டிவரும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த டிரைவர், அவரது நண்பர், தனியார் பள்ளி டிரைவர் என 3 பேரை பிடித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கும், சுகுணவள்ளிக்கும் இடையே தவறான பழக்கம் ஏதும் உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, சுகுணவள்ளி வீட்டின் அருகே இருக்கும் ஒரு கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில், 'ஹெல்மெட்' அணிந்து கொண்டு ஒருவர் தப்பி ஓடும் காட்சி பதிவாகி உள்ளது. இதனால் அவர் தான் சுகுணவள்ளியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் குடும்ப பிரச்சினையில் அவரை உறவினர்கள் யாரேனும் கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், கொலையாளியை பிடித்தால் மட்டுமே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.