< Back
மாநில செய்திகள்
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் வெட்டப்பட்ட பெண் பழ வியாபாரி சிகிச்சை பலனின்றி சாவு ...முன்விரோதம் காரணமா? போலீஸ் விசாரணை
சென்னை
மாநில செய்திகள்

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் வெட்டப்பட்ட பெண் பழ வியாபாரி சிகிச்சை பலனின்றி சாவு ...முன்விரோதம் காரணமா? போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
21 July 2023 1:25 PM IST

சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மர்மநபர்களால் வெட்டப்பட்ட பெண் பழ வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 34). இவர், மின்சார ரெயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சைதாப்பேட்டையை சேர்ந்த டக்கா மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இமானுவேல் (11), சோபியா (7) என 2 பிள்ளைகள் உள்ளனர்.

இதற்கிடையில் டக்கா மணி இறந்துவிட்டதால் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த புவனேஷ் என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டு, அவருடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார். ராஜேஸ்வரி ரெயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து வந்தார்.

கடந்த 3 மாதங்களாக ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரெயில் நிலைய நடைமேடையில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

இந்த ரெயில் இரவு 8.30 மணியளவில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றபோது, அதிலிருந்து ராஜேஸ்வரி இறங்கி 1 மற்றும் 2-வது நடைமேடைக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த 4 மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர்.

பின்னர் நொடிப்பொழுதில் அந்த மர்மநபர்கள் தங்கள் கைகளில் வைத்திருத்த கத்தி மற்றும் அரிவாளால் ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு, அதே ரெயிலில் ஏறி தப்பிச்சென்றனர். இதில், ராஜேஸ்வரியின் முகத்தில் 10 இடத்தில் வெட்டு விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஸ்வரி உயிருக்கு போராடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு ராஜேஸ்வரியை கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான வழித்தடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-

இறந்த ராஜேஸ்வரிக்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த டக்கா மணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. டக்கா மணி இறந்தவுடன் புவனேஷ் என்பவரை திருமணம் செய்து, அவருடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார். இறந்த ராஜேஸ்வரிக்கு 4 கணவன்கள் உள்ளதாகவும், இவர்களில் முதலாவது மற்றும் 3-வது கணவர் இறந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், கொலையாளிகள் குறித்து அடையாளம் காணுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வியாபார போட்டியால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? இல்லை குடும்ப பிரச்சினை காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகிறோம். கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி, பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சத்யா என 2 பெண்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 3-வது சம்பவமாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான நேரத்தில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்