சென்னை
கைப்பிடி சுவரில் அமர்ந்து கணவருடன் பேசிக்கொண்டிருந்தபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் என்ஜினீயர் பலி
|வீட்டின் மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்து கணவருடன் பேசிக்கொண்டிருந்த பெண் என்ஜினீயர், அங்கிருந்து தவறி விழுந்து பலியானார்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 25). என்ஜினீயரான இவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி (25). இவரும் என்ஜினீயர்தான். இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் லக்கி என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் இரவு அபிராமி தனது கணவருடன், 2 மாடிகள் கொண்ட தங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தார். அபிராமி, மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்தபடி இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அபிராமி அங்கிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அபிராமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அபிராமிக்கு திருமணம் ஆகி 2½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.