சென்னை
லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் சாவு - தம்பி கண் முன்னே பலியான சோகம்
|மதுரவாயல் அருகே தம்பி கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.
போரூரை சேர்ந்தவர் ஷோபனா (வயது 22). இவர் கூடுவாஞ்சேரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி அரிஷ் (17). முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஷோபனா தனது தம்பி அரிஷை மொபெட்டில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது, வேன் ஒன்று மொபட்டை முந்தி சென்ற போது மொபெட் மீது உரசியதில் இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியதில் சக்கரத்தில் சிக்கி ஷோபனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்தில் அவரது தம்பி அரிஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று இறந்துபோன ஷோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் தம்பி கண் முன் கம்ப்யூட்டர் என்ஜினீயர் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை அடுத்த புழல் காவாங்கரை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கிளாரா (52). மாதவரம் மண்டலத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த இவர், தனது மகள் செல்வி (30) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் மாதவரத்தில் இருந்து புழல் நோக்கி சென்ற போது, வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கீழே விழுந்து பரிதாபமாக செத்தார். செல்விக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.