< Back
மாநில செய்திகள்
ஒப்பந்ததாரரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

ஒப்பந்ததாரரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயர் கைது

தினத்தந்தி
|
24 March 2023 11:35 PM IST

மீன்சுருட்டி அருகே சாலை, களம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்ததாரரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

லஞ்சம்

கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அயூப்கான் மனைவி வாஹிதாபானு (வயது 53). இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊரக வளர்ச்சி துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி வருகின்றார். ஜெயங்கொண்டம் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒப்பந்ததாரருமான மணிமாறன் என்பவர் சாலை மற்றும் களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

இதில் ஒப்பந்த தொகையில் 2 சதவீதம் என்ற வகையில் ரூ.30 ஆயிரத்தை வாஹிதாபானு லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமாறன் இதுகுறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளை மணிமாறனிடம் கொடுத்து வாஹிதாபானுவிடம் கொடுக்க அறிவுறுத்தினர்.

கைது

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வாஹிதாபானுவை தொடர்பு கொண்ட மணிமாறன் தான் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதியில் நிற்பதாகவும், இங்கு வந்து பணத்தை வாங்கி செல்லுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய வாஹிதாபானு சம்பவ இடத்திற்கு சென்று மணிமாறனிடம் லஞ்ச பணத்தை வாங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஓழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்