< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஊழியர் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஊழியர் பலி

தினத்தந்தி
|
12 Oct 2023 4:30 AM IST

பழனி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பெண் ஊழியர் பலியானார். மகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாடகை கார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை வள்ளியம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 28). உடுமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக உள்ளார். இவருடைய மனைவி இந்திரா (22). இவர்களுக்கு 4 வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பிணியான இந்திரா பிரசவத்துக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதையடுத்து கடந்த மாதம் இந்திராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மோகன்ராஜ், தனது மனைவியை உடுமலைக்கு அழைத்து வருவதற்காக தூத்துக்குடிக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு இந்திரா, மாமியார் பேச்சியம்மாள் (40), உறவினர் வன்னியராஜ் (55) மற்றும் குழந்தைகளுடன் மோகன்ராஜ், வாடகை காரில் உடுமலைக்கு புறப்பட்டார். காரை தூத்துக்குடியை சேர்ந்த சூர்யா ஓட்டினார்.

பெண் பலி

இவர்கள் வந்த கார், நேற்று அதிகாலையில் பழனி-பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் தாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் சாலையோர இரும்பு தடுப்பில் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோகன்ராஜ், இந்திரா, வன்னியராஜ், சூர்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். நல்ல வேளையாக குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களும், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்தில் பலியான பேச்சியம்மாள் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்