< Back
மாநில செய்திகள்
மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானை மீட்பு..!
மாநில செய்திகள்

மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானை மீட்பு..!

தினத்தந்தி
|
27 May 2022 6:07 PM IST

மதுரையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானையை வனத்துறையினர் மீட்டு யானைகள் மறுவாழ்வு மையத்திற்க்கு கொண்டு சென்றனர்.

மதுரை:

மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்தவர் மாலா. இவர் தனது வீட்டில் பெண் யானை ஒன்றை வளர்த்து வந்தார். அதனை பராமரிக்க பாகன் ஒருவரையும் நியமித்திருந்தார். மாலா தனது யானையை கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்தார்.

இந்தநிலையில், அவர் உரிய அனுமதியில்லாமல் யானையை வளர்த்து வந்ததாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் கிடைத்தது. அது குறித்து மாலாவிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த யானைக்கு உரிய ஆவணங்கள் இன்றி வளர்க்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் அந்த யானைக்கு சுமார் 22 வயது இருக்கும் எனவும், அந்த யானை பீகார் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. யானைக்கான ஆவணங்கள் தொலைந்து விட்டதாக வனத்துறையினரிடம் மாலா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த யானையை வனத்துறையினர் அங்கிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, மாலா எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாநரக போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

போலீசார் உதவியுடன் யானையை வனத்துறையினர் மீட்க முயன்றனர். அந்த சமயத்தில் யானை பாகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பாகன் இல்லாததால் யானை லாரியில் ஏற மறுத்தது.

அதன்பின்னர், மாற்று பாகன் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் யானை ஏற்றப்பட்டது. இதையடுத்து மதுரையில் இருந்து திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு யானை கொண்டு செல்லப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்