லஞ்ச பணத்தில் வீட்டு மனைகள் வாங்கி குவித்த பெண் துணை சார்பதிவாளர்: கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல்..!
|விருத்தாச்சலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 8 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். அவை பத்திரம் பதிய வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கு பணியில் இருந்த துணை சார்பதிவாளர் சங்கீதாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, இதுவரை லஞ்சமாக பெற்ற 42 லட்ச ரூபாய் அவருடைய வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே, வங்கிக் கணக்கு பரிமாற்றம் மூலம் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த லஞ்ச பணத்தின் மூலம் அவர் வீட்டு மனைகள் வாங்கி குவித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து துணை சார்பதிவாளர் சங்கீதா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த புரோக்கர் உதயகுமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில், சங்கீதா கைதாவாரா? மேலும் ஏதாவது சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.