< Back
மாநில செய்திகள்
ஆத்தூரில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது பெண் குழந்தை பலி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
சேலம்
மாநில செய்திகள்

ஆத்தூரில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது பெண் குழந்தை பலி அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
5 July 2023 2:14 AM IST

ஆத்தூரில்தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது பெண் குழந்தை பலிஅரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர்

ஆத்தூரில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் குழந்தை

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி 5-வது வார்டு முல்லைவாடி கம்பன் தெருவை சேர்ந்தவர் விஜயராஜன். இவர் ஆத்தூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு 1½ வயதில் அத்விகா என்ற பெண் குழந்தை இருந்தது.நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டின் முன்பு குழந்தை அத்விகா விளையாடி கொண்டிருந்தது. வீட்டின் முன்புறம் 3 அடி ஆழம் கொண்ட சிறிய தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது.

அந்த தண்ணீர் தொட்டி அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை அத்விகா திடீரென அதில் தவறி விழுந்து மூழ்கியது. அதே நேரத்தில் குழந்தையை காணாமல் வீடு முழுவதும் தேடிய அவரது பெற்றோர் வீட்டின் வெளியே சென்று பார்த்தனர்.

சாவு

அவர்கள் தண்ணீர் தொட்டியை பார்த்த போது குழந்தை அத்விகா மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு, ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

குழந்தை இறந்த தகவலை அறிந்து ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு அந்த குழந்தையின் உறவினர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தங்களின் 1½ வயதான ஒரே குழந்தை இறந்து போனதை அறிந்து குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து, ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று அந்த பகுதியில் இரவில் குடிநீர் வினியோகம் நடைபெற்ற போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

குழந்தையின் பெற்றோர் தண்ணீர் பிடிப்பதற்காக அந்த தண்ணீர் தொட்டியை திறந்துள்ளனர். பின்னர் அவர்கள் தண்ணீர் பிடித்து விட்டு தொட்டியை மூடுவதற்கு முன்பு வீட்டுக்குள் சென்று உள்ளனர். அவர்கள் திரும்பி வருவதற்குள் தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக அதில் தவறிவிழுந்து இறந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

1½ வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலியான சம்பவம் ஆத்தூரில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் செய்திகள்