< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
21 Jun 2023 12:20 AM IST

தனியார் நிறுவனங்களிடம் இருந்து வசூலித்த உரிமம் கட்டணத்தை 8 வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சென்னை துறைமுகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் உள்ள சீசோர் லாஜிஸ்டிக் நிறுவனம் உள்பட பல நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் இடங்கள் குத்தகைக்கு எடுத்து, கப்பலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைக்க வாடகைக்கு விடுகிறோம். இதற்கான உரிமம் கட்டணத்தை, பெரிய துறைமுகங்களின் கட்டணம் ஆணையம் நிர்ணயிக்கிறது.

மேலும் இடத்துக்கான வாடகையை மத்திய அரசு அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது. இந்தநிலையில், 1-4-2004 முதல் 1-12-2008 வரை உரிமம் கட்டணத்தை உயர்த்தி 2008-ம் ஆண்டு சென்னை துறைமுகம் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரத்து

அதாவது கடந்த காலத்துக்கான கட்டணத்தை பின்தேதியிட்டு உயர்த்தியுள்ளார். ஆனால், மத்திய அரசு, கடந்த 2004-ம் ஆண்டு துறைமுகம் நில கொள்கை முடிவு 2011-ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவின்படி 2008-ம் ஆண்டு உரிமம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதாவது திறந்தவெளி இடத்துக்கு 2 சதவீதமும், மூடப்பட்ட இடத்துக்கு 5 சதவீதமும் உரிமம் கட்டணம் உயர்த்தி வசூலித்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகாரம் இல்லை

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் பி.சதீஷ் சுந்தர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "லாலா ராம் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு இதுபோல கடந்த காலங்களுக்கான கட்டணத்தை உயர்த்த அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளது.

இதேபோலத்தான் ஒரு வழக்கில் குஜராத் ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்குகளை ஏற்றுக்கொள்கிறேன். 1-4-2004 முதல் 30-11-2008-ம் ஆண்டு வரை வசூலித்த கட்டணத்தை 8 வாரத்துக்குள் சென்னை துறைமுக நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்