திருப்பூர்
சான்றுகள் இல்லாமல் விதைகளை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை
|உரிய சான்றுகள் இல்லாமல் விதைகளை விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரிய சான்றுகள் இல்லாமல் விதைகளை விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
விதைகள் விற்பனை
உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள அனைத்து விதை விற்பனையாளர்களும் உரிமம் பெற்ற பிறகே விதை விற்பனை செய்ய வேண்டும். விற்பனை நிலையம் மற்றும் நர்சரிகளின் முகப்பில் விற்பனை பலகையில் விதை, ரகம், நிலை, இருப்பு அளவு, விற்பனை விலை ஆகிய விவரங்களை தெளிவாக விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை நிலையங்களில் விற்கப்படும் விதைகளின் கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் மற்றும் இருப்பு பதிவேடு ஆகியவை தினசரி முறையாக பதிவு செய்து பராமரிக்கப்பட வேண்டும். உண்மை நிலை விதையில் அறிவிக்கப்படாத ரகத்திற்கு கட்டாயமாக பதிவெண் சான்றிதழ், விதைச் சான்று மற்றும் அங்கக சான்று துறையில் பெற்ற பின்பே விற்பனை மேற்கொள்ள வேண்டும். மேலும் நடைமுறையில் உள்ள பதிவெண் சான்றிதழின் காலாவதி நாளிற்கு ஒரு மாத காலம் முன்பே அதனை புதுப்பிக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். விற்பனை செய்யக்கூடிய அனைத்து விதை குவியல்களுக்கும் பணி விதை மாதிரியின் முடிவு அறிக்கையை பெற்ற பின் விற்பனையை மேற்கொள்ள வேண்டும்.
விதை ஆய்வாளர்களால் விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்படும்போது மேற்கண்ட பதிவேடுகள், பட்டியல்கள், புதுப்பிக்கப்படாத பதிவெண் சான்றிதழ், முளைப்புத் திறன் அறிக்கை பெறாத விதை குவியல்கள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தால் விதை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெரும்பான்மையாக விற்கப்படுகின்ற விதை குவியல்களில் இருந்து விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி தரத்தினை பரிசோதிக்கப்படுகிறது.
எச்சரிக்கை
பரிசோதனையின் முடிவில் தரமற்றது என பெறப்படும் முளைப்பு திறன் அறிக்கையை பொறுத்து விதை சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உரிய சான்றுகள் இல்லாமல் விதை விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகள் விதைகளை வாங்கும் போது விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையில் உரிமம் பெற்ற அரசு, அரசு சார்ந்த, தனியார் விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். விதை விபர அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள விதையின் பெயர், ரகம், குவியல் எண், பரிசோதித்த தேதி, காலாவதி நாள், விதைக்கும் பருவம் அறிந்து விற்பனை பட்டியலில் கையொப்பமிட்டு வாங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.