< Back
மாநில செய்திகள்
பல்வேறு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு
மதுரை
மாநில செய்திகள்

பல்வேறு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

தினத்தந்தி
|
1 April 2023 12:15 AM IST

மதுரை கப்பலூர், சிட்டம்பட்டி, சாத்தூர், திருப்பாச்சேத்தி உள்பட பல்வேறு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 10 முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது

திருமங்கலம்,

மதுரை கப்பலூர், சிட்டம்பட்டி, சாத்தூர், திருப்பாச்சேத்தி உள்பட பல்வேறு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் 10 முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது

நான்கு வழி சாலை

கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் நான்கு வழி சாலை திட்டம் அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து சாலை அமைப்புச் செலவினை ஈடுகட்ட சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. சாலை அமைப்பு செலவு ஈடு கட்டப்பட்ட பின்பு இந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது வரை இந்த சுங்கச்சாவடிகள் அகற்றப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை உள்ளது.

சாலை பராமரிப்பு செலவு தொடர்வதால் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நிலையும் தொடர்கிறது என மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

நான்கு வழிச்சாலை அமைப்பு செலவை ஈடுகட்ட என கடந்த 2017-ம் ஆண்டு வரை 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5-ம், டீசலுக்கு ரூ.2-ம் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது.

பெயர் மாற்றம்

ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு இந்த கட்டண வசூல் சாலை மேம்பாட்டு நிதி பெயர் மாற்றம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021-2022-ம் ஆண்டில் மட்டும் இந்த சாலை மேம்பாட்டு நிதி ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து நான்கு வழி சாலையில் சுங்கக்கட்டணம் உயர்வு ஆண்டுக்கு இருமுறை சுழற்சி முறையில் அமல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள 45 சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவற்றில் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

10 சதவீதம் உயர்வு

விருதுநகர்- சாத்தூர் இடையே எட்டூர் வட்ட சுங்கச்சாவடியில் 10 சதவீதம் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது.

60 கிலோமீட்டர் இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்தும் அமலுக்கு வரவில்லை இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

கப்பலூர் சுங்கச்சாவடி

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு விவரம்:- கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 100 ரூபாயும், 24 மணி நேரம் பயன்பாட்டிற்கு 150 ரூபாயும், 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.3280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக வணிக வாகனம் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.160, 24 மணி நேரம் திரும்பி பயன்பாட்டிற்கு ரூ.240, 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.5295, 2 அச்சு கனரக வாகனம், பஸ்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.335, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.500, 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.11095 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

3 அச்சு கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.365, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டு கட்டணம் ரூ.545, 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.12,105, நான்கு முதல் ஆறு அச்சு வரையிலான கனரக வாகனங்கள் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.520, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.785, 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.17400, 7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.635, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.955, 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.21180 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிட்டம்பட்டி சுங்கச்சாவடி

சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பழைய, புதிய கட்டணங்கள் விவரம்:-

கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் பழைய கட்டணம் ரூ.100, புதிய கட்டணம் ரூ.105. கமர்ஷியல் வாகனங்கள், மினி வேன் பழைய கட்டணம் ரூ.160. புதிய கட்டணம் ரூ.165. பஸ், டிரக் மற்றும் 2 அச்சு வாகனங்கள் பழைய கட்டணம் ரூ.335, புதிய கட்டணம் ரூ.350. மூன்று அச்சு பஸ், டிரக், கமர்ஷியல் வாகனங்கள் பழைய கட்டணம் ரூ.365. புதிய கட்டணம் ரூ.380. பஸ், டிரக் 4,5,6 அச்சு வாகனங்கள் பழைய கட்டணம் ரூ.520. புதிய கட்டணம் ரூ.550. பஸ், டிரக் 7 அச்சு வாகனங்கள் பெரிய வாகனங்கள் பழைய கட்டணம் ரூ.635. புதிய கட்டணம் ரூ.670.

திருப்பாச்சேத்தி

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: கார், ஜீப், வேன், இலகு ரக மோட்டார் வாகனங்கள் ஒரு தடவை கடந்து செல்ல ரூ.90 (பழைய கட்டணம் ரூ.85), இலகு ரக வணிக வாகனம், இலகு ரக பொருள் போக்குவரத்து வாகனம் அல்லது மினி பஸ் ஒரு தடவை கடந்து செல்ல ரூ.140 (பழைய கட்டணம் ரூ.135), பஸ் அல்லது டிரக் இரண்டு அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒரு தடவை கடந்து செல்ல ரூ.300 (பழைய கட்டணம் ரூ.285), மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனங்கள் ஒரு தடவை கடந்து செல்ல ரூ.325 (பழைய கட்டணம் ரூ.310), கனரக கட்டுமான எந்திர வாகனம், மண் அள்ளும் எந்திரம் அல்லது 4 முதல் 6 அச்சுகள் கொண்டவை ஒரு தடவை கடந்து செல்ல ரூ.470 (பழைய கட்டணம் ரூ.445), மிக அதிக அளவு கொண்ட வாகனங்கள் 7 அல்லது அதிக அச்சுகள் கொண்டவை ஒரு தடவை கடந்து செல்ல ரூ.570 (பழைய கட்டணம் ரூ.540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்