மராட்டியத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தந்தை, தோல்வியடைந்த மகன்...
|10-ம் வகுப்பு தேர்வு எழுதிய தந்தை தேர்ச்சி பெற்ற நிலையில், அதே தேர்வை எழுதிய அவரது மகன் தோல்வியடைந்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவரான பாஸ்கர் வாக்மாரே, தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளார். இருப்பினும் தனது படிப்பை மீண்டும் தொடர வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஸ்கர் மீண்டும் தனது படிப்பை தொடர முடிவு செய்தார். இதற்காக இரவு, பகலாக படித்து, இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுதேர்வை அவர் எழுதியுள்ளார். அதே சமயம் அவரது மகனும் 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.
இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகின. இதில் பாஸ்கர் தேர்ச்சி அடைந்தார். ஆனால் அவரது மகன் தோல்வி அடைந்தார். இது குறித்து பாஸ்கர் கூறுகையில், "சிறு வயதில் நிறைவேறாத ஆசையை, இப்போது நிறைவேற்றி விட்டேன். இதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து படித்தேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது.
எனது மகனும் இதே அண்டு 10-ம் வகுப்பு தேர்வை எழுதியதால், எனக்கும் அது உதவியாக இருந்தது. ஆனால், என் மகன் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. அடுத்து வரும் துணைத் தேர்வுகளை எழுதி, தோல்வியடைந்த தாள்களில் அவன் வெற்றி பெறுவான் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.