புதுக்கோட்டை
டிரைவரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது
|டிரைவரை தாக்கிய தந்தை-மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, புதுக்கோட்டையில் இருந்து இரவு நேரங்களில் புறப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் கீரனூருக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று வருகின்றது. இதனால் கீரனூருக்கு வர வேண்டிய பயணிகள் பஸ் நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்ட தனியார் பஸ்சில் கருப்பையா (வயது 53), அவரது மகன்கள் சரவணன் (23), வேலு (21) ஆகியோர் ஏறுவதற்காக டிரைவர் செல்வகுமார் (38) என்பவரிடம் கீரனூருக்கு பஸ் போகுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு டிரைவர் கீரனூருக்குள் பஸ் வராது என்றும், கடைசியாக பஸ் புறப்படும் நேரத்தில் நின்று கொண்டே தான் வரவேண்டும் எனவும் கூறியுள்ளார். பஸ் புறப்பட்டு கீரனூர் வந்ததும் பஸ்சில் பயணித்து வந்த 3 பேர் மற்றும் சிலர் டிரைவர் செல்வகுமாரை சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். இதில் டிரைவர் காயமடைந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையா, அவரது மகன்கள் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.