கடன் தொல்லையால் மகளை கொன்று விட்டு தந்தை-மகன் தற்கொலை... சேலத்தில் பரபரப்பு
|ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்,
சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 54). இவர் நோட்டு புத்தகம் ஒட்டும் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களது மகன் ரிஷிகேசன் (30). இவர் பி.இ. படித்து விட்டு தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து வந்தார். மகள் பூஜா (23). இவர் பி.காம். படித்து விட்டு கோவையில் தங்கி சி.ஏ. படிப்பதற்கான பயிற்சி எடுத்து வந்தார். இவர் விடுமுறையில் தற்போது சேலத்திற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் உறவினர் ஒருவருக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதற்காக நிர்மலா நேற்று காலை மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த போது வீடு திறந்து இருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்றபோது படுக்கை அறையில் கழுத்தில் காயத்துடன் மரக்கட்டிலில் மகள் பூஜா இறந்த நிலையிலும், அதன் அருகில் வீட்டின் விட்டத்தில் கணவர் வெங்கடேசன், மகன் ரிஷிகேசன் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை கண்டு அவர் கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் 3 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து நிர்மலா அம்மாபேட்டை போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் செல்வம், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து போலீசார் கூறியதாவது, 'நிர்மலா வீட்டை விட்டு வெளியில் சென்ற பிறகு தந்தை மகன், மகள் மட்டும் வீட்டில் இருந்து உள்ளனர். இந்த நிலையில் பூஜாவின் கழுத்தில் தூக்கு மாட்டி காயத்துடன் கட்டிலில் பிணமாக கிடந்தார். எனவே முதலில் பூஜாவை கொன்று விட்டு அதன்பிறகு தந்தை, மகன் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம். இருப்பினும் வெங்கடேஸ்வரன் ஒரு நோட்டு புத்தகத்தில் யார், யாரிடம் தான் கடன் வாங்கினேன், எவ்வளவு பணம் வாங்கியுள்ளேன் என்பதை எழுதி வைத்துள்ளார். எனவே கடன் தொல்லையால் 3 பேரும் இறந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரின் உடல்களையும் பார்த்து நிர்மலா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.