கன்னியாகுமரி
கோவிலில் திருட முயன்ற தந்தை-மகன் கைது
|மணவாளக்குறிச்சி அருகே கோவிலில் நகை திருட முயன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே கோவிலில் நகை திருட முயன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
திருட முயற்சி
மணவாளக்குறிச்சி அருகே சிவந்த மண் கல்லடிவிளையில் ஆற்றுமாடன் தம்புரான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ந் தேதி இரவு 2 பேர் புகுந்து அங்கு இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து உடைக்க முயன்றனர். ஆனால், உடைக்க முடியாததால் உண்டியலை கோவில் மூலையில் வீசி விட்டு சென்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ராஜகுமார் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உண்டியல் பணத்தை திருட முயன்ற நபர்களை தேடி வந்தனர். அவர்களை பிடிக்க குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தந்தை-மகன் சிக்கினர்
இந்தநிலையில் நேற்று காலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையிலான போலீசார் பரப்பற்று பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குளச்சல் பனவிளையை சேர்ந்த அய்யப்பன் (வயது52), அவருடைய மகன் விஜய் (21) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பெரியகுளம் எழுத்திட்டான் பாறை இசக்கியம்மன் கோவிலில் 2 கிராம் தங்க சங்கிலி திருடி உள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வெள்ளிமலை அடிவாரம் பாதையில் நடந்து சென்ற நாகர்கோவிலை சேர்ந்த ரசிகா (22) என்ற பட்டதாரி பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது.
நகைகள் மீட்பு
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2¼ பவுன் திருட்டு நகைகளை மீட்டனர். பின்னர் இருவரையும் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.