< Back
மாநில செய்திகள்
தம்பதியை தாக்கிய தந்தை-மகன் கைது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

தம்பதியை தாக்கிய தந்தை-மகன் கைது

தினத்தந்தி
|
24 Aug 2023 8:31 PM IST

வந்தவாசி அருகே தம்பதியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

வந்தவாசி

வந்தவாசி அருகே செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பானுமதி (வயது 37). சிவக்குமாருக்கும் அவரது அண்ணன் சண்முகத்துக்கும் (45) பொதுவான வீடு உள்ளது. இருவருக்கும் பொதுவான இந்த வீட்டின் மாடியில் மழையில் ஒழுகாமல் இருக்க சிவக்குமார் ஜல்லி போட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த சண்முகம், அவருடைய மகன்கள் சந்திரன் (27), நந்திவர்மன் ஆகியோர் ஏன் எங்களைக் கேட்காமல் செய்கிறீர்கள் என்று கேட்டு பானுமதி, சிவக்குமாரை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் பானுமதியின் தாயையும் அவர்கள் கட்டையாலும், கல்லாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பானுமதி வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம், அவருடைய மகன் சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்