சேலம்
மேச்சேரி அருகே குடிபோதையில் விபரீதம்: 3 பெண் குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை
|மேச்சேரி அருகே குடிபோதையில் 3 பெண் குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேச்சேரி
மேச்சேரி அருகே அரங்கனூர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரபுவுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 12-ந்தேதி பிரபு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும், அதை அவருடைய மனைவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோபித்து கொண்டு அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு தமிழரசி, 3 பெண் குழந்தையுடன் சென்று விட்டார். நள்ளிரவில் பிரபுவின் சத்தம் கேட்டு மனைவி தமிழரசி வீட்டிற்கு வந்த போது குடிபோதையில் மண்எண்ணெயை பிரபு தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய கணவரை ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பிரபு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்து விட்டார். இது குறித்து பிரபுவின் மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.