சென்னை
மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு 18 வயது சிறுவனுக்கு மோட்டார்சைக்கிளை கொடுத்த தந்தை கைது
|மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து 18 வயது சிறுவனுக்கு மோட்டார்சைக்கிளை கொடுத்த அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர், வாக்கின் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). இவருடைய மகன் தீபக் பாலாஜி (18). இவர், ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருடைய நண்பர் லோகேஷ் (18). திரு.வி.க. நகரைச் சேர்ந்தவரான லோகேஷ், நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த மாதம் 26-ந்தேதி 18 வயது நிரம்பாத தீபக் பாலாஜி, தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பர் லோகேசுடன் அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருந்தார். தீபக் பாலாஜி, அதிவேகமாக மோட்டார்சைக்கிளை ஓட்டியதாக கூறப்படுகிறது.
இதில் இருவரும் திடீரென நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்து இருந்த லோகேஷ் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீபக் பாலாஜி லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் கடந்த 6-ந்தேதி மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கூறினர். அதன்படி லோகேசின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
இந்தநிலையில் 18 வயது நிரம்பாத சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து அனுப்பியதாக தீபக் பாலாஜியின் தந்தை சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்த திருமங்கலம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார், சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.