வேலூர்
குழந்தையை பிளேடால் அறுத்த தந்தை-பாட்டி கைது
|அணைக்கட்டு அருகே குழந்தையை பிளேடால் அறுத்த தந்தை மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
குழந்தை பிறந்தது
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30).
இவர் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஹேமலதா (22). இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
ஹேமலதா கருவுற்ற நிலையில், கணவர் மணிகண்டன் பணிக்கு சென்று விட்டார். இதனால் கருவுற்ற 3-வது மாதம் முதல் ஹேமலதா, தலை பிரசவத்திற்காக ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 26 நாட்களுக்கு முன்பு ேமலதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பிளேடால் அறுத்தார்
அதைத்தொடர்ந்து மணிகண்டன் குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது குழந்தை என்னை போல் இல்லை.
இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஆத்திரமடைந்த மணிகண்டன், பிளேடால் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையில் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
படுகாயமடைந்த குழந்தை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தந்தை- பாட்டி கைது
இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை தேடிவந்தனர்.
இந்த நிலையில் மணிகண்டன் பயன்படுத்தும் செல்போன் நம்பர் தாம்பரத்தில் இருப்பதாக காட்டியது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சென்று தாம்பரத்தில் பணியில் இருந்த மணிகண்டனை கைதுசெய்தனர்.
மேலும் குழந்தையை பிளேடால் அறுத்ததற்கு குழந்தையின் பாட்டி லட்சுமியும் காரணம் என்று கூறி அவரையும் போலீசார் கைது செய்தனர்.