சென்னை
6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு
|கடன் தொல்லையால்6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் அயனாவரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
அயனாவரம்,
சென்னை அயனாவரம் பூசனம் தெருவைச் சேர்ந்தவர் கீதா கிருஷ்ணன் (வயது 50). இவர், அதே பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர், தன்னுடைய 6 வயது மகள் மானசாவுடன் தனியாக வசித்து வந்தார். மானசா அங்குள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள்.
கீதா கிருஷ்ணன், அயனாவரம் சுப்பராயன் தெருவில் உள்ள தனது வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு குத்தகைக்கு கொடுப்பதாக கூறி ரூ.2½ லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை வாங்கிய கீதா கிருஷ்ணன், லட்சுமிபதிக்கு வீட்டையும் கொடுக்காமல், வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இது குறித்து கேட்பதற்காக நேற்று முன்தினம் இரவு கீதா கிருஷ்ணனுக்கு லட்சுமிபதி போன் செய்தார். அவர் எடுக்காததால் நேடியாக அவரது வீட்டுக்கே சென்றார். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை.
இதனால் லட்சுமிபதி ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே கீதா கிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அயனாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு கீதாகிருஷ்ணன் தூக்கில் பிணமாகவும், அவருடைய மகள் மானசா, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரிந்தது. கீதா கிருஷ்ணன் தனது மகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் 2 பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
தற்கொலை செய்த கீதா கிருஷ்ணன், 2005-ம் ஆண்டு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த கல்பனா என்பவரை திருமணம் செய்துகொண்டு கோட்டூர்புரத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு குணாலி ஸ்ரீ மற்றும் மானசா என்ற 2 மகள்கள் பிறந்தனர்.
ஆனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இவர்கள், 2020-ம் ஆண்டு குடும்பத்துடன் தற்கொலை செய்ய தீர்மானித்தனர். இதில் கல்பனாவும், மூத்த மகள் குணாலி ஸ்ரீயும் உயிரிழந்தனர்.
கடைசி நேரத்தில் மனது மாறிய கீதா கிருஷ்ணன், தனது 2-வது மகள் மானசாவை தூக்கிக்கொண்டு திருப்பதிக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து சில நாட்களில் சென்னை திரும்பி வந்த கீதா கிருஷ்ணனை கோட்டூர்புரம் போலீசார் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அடுத்த சில மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்த கீதாகிருஷ்ணன், தனது 2-வது மகளுடன் அயனாவரத்தில் உள்ள இந்த வீட்டில் குடியேறினார்.
அதன்பிறகும் கடன் தொல்லையால் கீதா கிருஷ்ணன் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்கொலை முடிவுக்கு வந்த கீதாகிருஷ்ணன் தான் ஆசை ஆசையாக வளர்த்த மகள் மானசாவை தனக்கு பிறகு உறவினர்கள் யாரும் பார்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் மகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்காக மகள் மானசாவுக்கு அலங்காரம் செய்தார். பின்னர் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன்பிறகு மகளின் உடல் மீது பட்டு புடவையை போர்த்தி விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரு நொடி கூட 2-வது மகளை விட்டு பிரிய மனம் இன்றி மிகவும் பாசமாக வளர்த்து வந்தார். ஆனாலும் கடன் தொல்லையால் ஆசையாக வளர்த்த மகளை கொன்றுவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.