திருட்டு வழக்கில் தந்தை கைது; அவமானம் தாங்காமல் மகன் தற்கொலை
|திருட்டு வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டு இருப்பதால், மகன் மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காந்திநகரை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 37). கிராம நிர்வாக அலுவலராக இருந்த இவர், தனது வேலைைய ராஜினாமா செய்துவிட்டு, பின்னர் பா.ஜனதாவில் இணைந்தார். சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பிரிதிவிராஜ், டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கைவரிசை காட்டிய திருடனை தேடிவந்தனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்பேரில் குறிஞ்சாங்குளத்தை சேர்ந்த மலர் மன்னன் என்ற மாணிக்கம் (வயது 65) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், பிரிதிவிராஜ் வீட்டிற்குள் கதவை உடைத்து புகுந்து பணத்தை திருடியதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே அவருடைய மகன் கர்ணன் (24) போலீஸ் நிலையத்திற்கு வந்து மாணிக்கத்தை பார்த்து சென்றார்.
திருட்டு வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டு இருப்பதால், மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவமானம் தாங்காமல் கர்ணன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கருதுகிறார்கள். இருந்தாலும், அவரது சாவுக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்ககள்.