செங்கல்பட்டு
முன்விரோதத்தில் முதியவரை அடித்து கொன்ற தந்தை, மகன்
|மேல்மருவத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக முதியவரை தந்தை, மகன் அடித்து கொன்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ரெட்டிப்பாளயத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன்கள் ரங்கநாதன் (வயது 75). இவருடைய தம்பி சின்னக்கண்ணு (68) சகோதரர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருவதாக தெரிகிறது. இதனையடுத்து கடந்த 4-ந் தேதியன்று மாலை சின்னக்கண்ணு அவரது மகன் தசரதன் மற்றும் மனைவி சாந்தி ஆகியோர் சேர்ந்து ரங்கநாதனை கையால் அடித்து தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்த ரங்கநாதன் செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தொடர்பாக ரங்கநாதனின் மகன் புருஷோத்தமன் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்திடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், ரங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தசரதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள சின்னக்கண்ணு, சாந்தியை மேல்மருவத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.