< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரம் அருகே மின்கம்பி உரசி தந்தை, மகன் சாவு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரம் அருகே மின்கம்பி உரசி தந்தை, மகன் சாவு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

தினத்தந்தி
|
21 March 2023 2:00 PM IST

மின்கம்பி உரசி தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி சாவு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 42). இவரது மகன் ஹேமநாதன் (10). நேற்று முன்தினம் கோதண்டராமன் தன் வீட்டு சமையல் தேவைக்காக தண்ணீர் கேன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் மகனுடன் கடைக்கு சென்றார். மின்வாரியத்தின் மெத்தனப்போக்கால் சாலையில் அறுந்து தொங்கிய மின் கம்பியில் சிக்கி கோதண்டராமன், ஹேமநாதன் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மறியல் போராட்டம்

இந்த நிலையில் நேற்று மின்வாரியத்தின் மெத்தனப்போக்கால் ஒரே நேரத்தில் தந்தை-மகன் இருவரும் உயிரிழந்து இருப்பதாகவும் அதனால் கோதண்டராமன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை தந்தை-மகன் இருவரது உடலையும் வாங்க மாட்டோம் என்று கூறி வடகடம்பாடி கிராம மக்கள், அவரது உறவினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் என 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் போராட்ட குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் சார்பில் பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி வடகடம்பாடி ஊராட்சி தலைவர் வி.ஜி.பரசுராமன், ஊராட்சி துணைத்தலைவர் தேவிகா சண்முகம், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் எஸ்.ஜீவரத்திரனம் ஆகியோர் கலெக்டரிடம் பேச்சுவார்ததை நடத்தினர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

உடனடியாக கோதண்டராமன் குடும்பத்திற்கு மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இறந்த கோதண்டராமன் மனைவிக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் அவர்களிடம் கலெக்டர் ராகுல்நாத் உறுதி அளித்தார். இதனை ஏற்ற அவர்கள் மறியலை கைவிட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தந்தை-மகன் உடலை பெற்று சென்றனர்.

அதன் பின்னர் கோதண்டராமனின் மனைவி லட்சுமியிடம் மின்வாரியம் சார்பில் இழப்பீடு தொகையாக தந்தை-மகன் என இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம், ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வடகடம்பாடி ஊராட்சி தலைவர் பரசுராமன், கிராம நிர்வாக அலுவலர் பாபு முன்னிலையில் செங்கல்பட்டு மின்வாரிய மேற்பார்வை என்ஜினீயர் கிருஷ்ணமூர்த்தி நேரில் சென்று வழங்கினார்.

மேலும் செய்திகள்