< Back
மாநில செய்திகள்
தந்தை, மகனை அரிவாளால் வெட்டி ரூ.32 லட்சம் கொள்ளை
நீலகிரி
மாநில செய்திகள்

தந்தை, மகனை அரிவாளால் வெட்டி ரூ.32 லட்சம் கொள்ளை

தினத்தந்தி
|
4 Sep 2022 2:41 PM GMT

காய்கறி வியாபாரிகளுக்கு பணம் கொடுக்க வந்த தந்தை, மகனை அரிவாளால் வெட்டி ரூ.32 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஊட்டி,

காய்கறி வியாபாரிகளுக்கு பணம் கொடுக்க வந்த தந்தை, மகனை அரிவாளால் வெட்டி ரூ.32 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ரூ.32 லட்சம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவரது மகன் யுவராஜ் (25). இவர்கள் 2 பேரும் ஊட்டியில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை, திருச்சியில் வசூலிக்கின்றனர். பின்னர் ஞாயிற்றுக்கிழமை தோறும் அவர்கள் ஊட்டிக்கு வந்து வியாபாரிகளிடம் காய்கறிக்கான பணத்தை கொடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தங்கராஜ், யுவராஜ் இருவரும் திருச்சியில் இருந்து பஸ் மூலம் நேற்று அதிகாலையில் ஊட்டிக்கு வந்தனர். அப்போது திருச்சியில் வசூலித்த ரூ.32 லட்சத்தை ஒரு பையில் தங்கராஜ் வைத்திருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு தந்தை, மகன் 2 பேரும் மார்க்கெட் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் 2 பேரையும் மறித்தது.

அரிவாள் வெட்டு

தொடர்ந்து காரில் இருந்து இறந்த 3 பேர் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த பின்னர், தங்கராஜ், யுவராஜ் 2 பேரையும் அரிவாளால் வெட்டினர். மேலும் அவர்களிடம் இருந்த பணப்பையை கொள்ளை அடித்து விட்டு காரில் தப்பி சென்றனர். இதில் தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ஊட்டி நகர மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி, அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடினர்.

2 பேர் கைது

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை காட்டேரி பகுதியில் ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தங்கராஜ், யுவராஜ் 2 பேரையும் வெட்டி விட்டு தப்பியது தெரியவந்தது. திருச்சி உறையூரை சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் (33), காங்கேயத்தை சேர்ந்த ரவி ராகுல் (18) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய ஒருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் பஸ்சில் பின் தொடர்ந்து நோட்டமிட்ட 2 பேர் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்