கோயம்புத்தூர்
தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது
|கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
கணபதி
கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழில் அதிபர்
கோவை சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 55). தொழில் அதிபர். இவருக்கு தொழிலை மேம்படுத்த ரூ.50 லட்சம் தேவைப்பட்டது.
இது பற்றி அவர் தனக்கு தெரிந்த சோபனாவிடம் கூறினார். அவர் மூலம் கோவை கணபதி பாலாஜி லேஅவுட் ஆறுபுளியமரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (65) கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
அவரிடம் கோகுல கிருஷ்ணன் தனக்கு ரூ.50 லட்சம் கடனாக தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருகிறேன்.
ரூ.5 லட்சம் கமிஷன்
அதற்கு கமிஷனாக ரூ.5 லட்சத்தை முன்கூட்டியே நீங்கள் தர வேண்டும் என்று கேட்டு உள்ளார். அதை நம்பிய கோகுலகிருஷ்ணன் ரூ.5 லட்சத்தை குணசேகரனின் வீட்டிற்கு சென்று கொடுத்து உள்ளார்.
அப்போது குணசேகரனும், அவருடைய மகன் செந்தில்குமாரும் (40) ஒரு வாரம் கழித்து வந்து ரூ.50 லட்சத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளனர். அதன்படி கோகுலகிருஷ்ணன், குணசேகரன் வீட்டிற்கு பணம் கேட்டு சென்றுள்ளார்.
ஆனால் அவர்கள் ரூ.50 லட்சம் கடன் வாங்கி கொடுக்காமல் அலைக்கழித்து உள்ளனர். பல முறை கேட்டும் ரூ.50 லட்சம் கடன் கிடைக்காததால் தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டு உள்ளார்.
தந்தை- மகன் கைது
அந்த பணத்தையும் தராமல் குணசேகரன் காலம் தாழ்த்தி உள்ளார். நேற்று முன்தினம் குணசேகரனிடம் பணத்தை கேட் பதற்காக கோகுலகிருஷ்ணன் சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், கோகுலகிருஷ்ணனை தகாத வார்த்தை களால் பேசியதுடன் பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் குணசேகரன், அவரது மகன் செந்தில்குமார் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான குணசேகரன், செந்தில்குமார் ஆகியோர் மீது கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.