< Back
மாநில செய்திகள்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் உண்ணாவிரத போராட்டம்
மாநில செய்திகள்

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் உண்ணாவிரத போராட்டம்

தினத்தந்தி
|
4 Oct 2024 3:59 AM IST

பாம்பன் புதிய பாலம் திறப்பு அன்று ரெயில் மறியலில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 5 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்ற 17 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அனைத்து படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதத்திற்கு அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமை தாங்கினார். மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்பட ஏராளமான மீனவர்களும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

நேற்று மாலை வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து உண்ணாவிரத பந்தலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த அனைத்து மீனவர்களையும், ஏற்கனவே அபராதம், தண்டனை விதித்து சிறையில் அடைத்துள்ள மீனவர்களையும் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படை பறிமுதல் செய்த அனைத்து படகுகளையும் மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்க இயலாத படகுகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநாட்டு மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அது போல் மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமரிடம் நேரில் முறையிட தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்