நாகப்பட்டினம்
அடிப்படை வசதிகளை கேட்டு உண்ணாவிரதம்
|அடிப்படை வசதிகளை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கீழ்வேளூர் அருகே வடக்காலத்தூர்- பாப்பாக்கோவில் வரை சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். வடக்காலத்தூர் பெரிய வாய்க்கால், ஆவராணி வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வடக்காலத்தூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இலுப்பூர் சத்திரம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தை மாவட்ட செயலாளர் மாரிமுத்து தொடங்கி வைத்தார். இதில் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தாசில்தார் ரமேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.