தஞ்சாவூர்
மாட்டுவண்டி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
|காட்டாறுகளில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
காட்டாறுகளில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரதம்
பேராவூரணி, பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள காட்டாறுகளில் மணல் அள்ள அரசு குவாரி அமைத்து மாட்டு வண்டிகளை கொண்டு மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். பேராவூரணி சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம் ஆகிய ஊர்களில் உள்ள போலீஸ் நிலையத்தில் பிடித்து வைத்துள்ள மாட்டுவண்டிகளை எவ்வித நிபந்தனையும் இல்லாமல் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
பேராவூரணி அருகே பெத்தநாச்சிவயல் பகுதியில் குவாரி அமைக்க அரசு இடம் பார்த்து உள்ள நிலையில் இதனை விரைவாக நடைமுறைப்படுத்தி அரசு குவாரி அமைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணி அண்ணா சிலை அருகில் ஏ.ஐ.டி.யூ.சி. மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கோஷம் எழுப்பினர்
இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொகுதி பொறுப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத் தலைவர் காளிதாஸ், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் கருப்பையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் மூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேலு மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் 250 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.