மயிலாடுதுறை
இலவச ஆஸ்பத்திரியை இடித்தால் உண்ணாவிரதம்
|மயிலாடுதுறையில், இலவச ஆஸ்பத்திரியை இடித்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என தருமபுரம் ஆதீனம் முகநூலில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில், இலவச ஆஸ்பத்திரியை இடித்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என தருமபுரம் ஆதீனம் முகநூலில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மகப்பேறு ஆஸ்பத்திரி
மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் 1951-ம் ஆண்டு ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக தருமபுரம் 24-வது ஆதீனம் தாயார் நினைவாக மகப்பேறு ஆஸ்பத்திரி அமைக்க திட்டமிட்டு அப்போதைய கவர்னரால் பணிகள் தொடங்கப்பட்டது.பின்னர் 25-வது ஆதீனம் காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் குமாரசாமி ராஜாவால் தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சாமிகள் இலவச மருத்துவ நிலையம் என்ற பெயரில் ஆஸ்பத்திரி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வந்தது. இந்த இடத்துடன் மருத்துவ மனையை நகராட்சி நிர்வாகத்திடம் தருமபுரம் ஆதீனம் வழங்கியது.
இடிக்கப்போவதாக தகவல்
காலப்போக்கில் இந்த கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் சிதிலமடைந்தது. மேலும் அந்த ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு தொடர்பாக சிகிச்சை பெறுவது படிப்படியாக குறைந்தது. இதைத்தொடர்ந்து இலவச ஆஸ்பத்திரி மூடப்பட்டு அதற்கு பதிலாக மற்றொரு இடத்தில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.தற்போதைய 27-வது ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், இலவச ஆஸ்பத்திரியில் மீண்டும் ஆதீனம் சார்பில் பராமரிப்பு பணி செய்ய அந்த இடத்தை மீண்டும் தங்களிடம் வழங்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில் 1951-ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது பூட்டிக்கிடக்கும் இலவச ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
உண்ணாவிரதம்
இதை அறிந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், தனது முகநூல் பக்கத்தில் மயிலாடுதுறையில் உள்ள சண்முகதேசிக சாமிகள் இலவச மருத்துவ நிலைய கட்டிடத்தை இடிக்க முயன்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து காப்போம் என்று பதிவிட்டு உள்ளார்.மேலும் பழைய புகைப்படங்கள், கல்வெட்டுக்களை அந்த முகநூலில் பதிவிட்டுள்ளார். தருமபுரம் ஆதீனத்தின் இந்த முகநூல் பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.