< Back
மாநில செய்திகள்
கல்குவாரிகளில் மோட்டார்களை பறிமுதல் செய்யக்கோரிவிவசாயிகள் திடீர் உண்ணாவிரத போராட்டம்திருச்செங்கோடு அருகே பரபரப்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

கல்குவாரிகளில் மோட்டார்களை பறிமுதல் செய்யக்கோரிவிவசாயிகள் திடீர் உண்ணாவிரத போராட்டம்திருச்செங்கோடு அருகே பரபரப்பு

தினத்தந்தி
|
10 Jun 2023 12:15 AM IST

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு அருகே கல்குவாரிகளில் மோட்டார்களை பறிமுதல் செய்யக்கோரி விவசாயிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்குவாரிகள்

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை, நெய்க்காரம்பாளையம், ஏளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன. இதனை தடை செய்யகோரி அப்பகுதி பொதுமக்கள் கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கல்குவாரிகளுக்கு ஜனவரி மாதத்துடன் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் அனைத்து குவாரிகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தற்ேபாது குவாரியில் மழைநீர், கிணறுகளில் இருந்து வரக்கூடிய ஊற்று தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை கல்குவாரியின் உரிமையாளர்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வருவதாக தெரிகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மோட்டார்களை பறிமுதல் செய்து, குடிநீர் திருடுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமசாமி என்பவரது தோட்டத்தில் நேற்று பந்தல் அமைத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் 20 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வருவாய் உதவி கலெக்டர் கவுசல்யா, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்துகிருஷ்ணன், தாசில்தார் பச்சமுத்து, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கல்குவாரிகளில் இருந்த மோட்டார்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

=======

மேலும் செய்திகள்