தர்மபுரி
தியாகியின் மனைவி உண்ணாவிரதம்
|தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் சுதந்திரப் போராட்ட தியாகி வடிவேல். இவரது மனைவி பார்வதி (வயது83). இவரது உறவினரான தொழிலதிபர் ஒருவர் ரூ.67 லட்சம் வரை பணத்தை கடனாக பெற்றுக் கொண்டு திருப்பி தரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், அவர் மீது தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் தர்மபுரி பென்னாகரம் ரோடு மேம்பாலம் அருகே தனது உறவினர்கள் முன்னிலையில் மூதாட்டி பார்வதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.
இதுகுறித்து மூதாட்டி பார்வதி கூறுகையில், எனது கணவர் வடிவேல் சுதந்திர போரட்ட தியாகி. எங்களுக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்குரிய இழப்பீடு பணம் எங்களுக்கு கிடைத்தது. எங்களிடம் வங்கியில் பணம் இருப்பதை அறிந்த எங்களது உறவினரான தொழிலதிபர் எங்களிடம் இருந்து ரூ.67 லட்சம் பணத்தை கடனாக பெற்றார். பணம் கொடுத்த ஒரு ஆண்டில் எனது கணவர் இறந்துவிட்டார். நான் கடனாக கொடுத்த பணத்தை தொழிலதிபரிடம் திருப்பி கேட்ட போது அந்த தொழிலதிபர் மிரட்டுகிறார். இது பற்றி தமிழ்நாடு முதல்-அமைச்சர், தர்மபுரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட போலீசாருக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கும், எனது மகனுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லை. எனவே எங்களுக்கு உயிர் பாதுகாப்பு தர வேண்டும். எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக உள்ளேன் என்று கூறினார்.