திருவள்ளூர்
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
|திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரளான விவசாயிகள் பங்கு பெற்றனர். புதுமாவிலங்கை கிராமத்தில் வண்டி பாதை அகற்றுதல், கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் கூட்டத்தினை முறைப்படுத்துதல், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை பொதுக்கூட்டம் நடத்தவும், சர்க்கரை ஆலையில் பின்பற்றும் ஒதுக்கீட்டு முறையினை நிறுத்தி வைத்தல், மாம்பாக்கத்தில் தடுப்பணை கட்டுதல், மீன் வளர்ப்பிற்கு ஏரி தண்ணீரை வெளியேற்றுவதை நிறுத்துதல், பயிர் கடன் உரிய காலத்தில் வழங்க வேண்டும், நில அளவை பணி விரைவில் முடிக்க வேண்டும், செங்கல் சூளை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இதேபோல் நிலுவையில் உள்ள கரும்பு கிரைய தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும், விவசாய நிலத்தில் செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
அவற்றின் மீது கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மலர்விழி, வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) தபேந்திரன் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.