தென்காசி
தென்காசியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
|கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விவசாயிகள் பலர் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். வேளாண் துறை அலுவலர்கள் விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் குறித்து பதில் கூறிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பல விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி கலெக்டருக்கு எதிராக கோஷமிட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங் ஆகியோர் கூறுகையில், "விவசாயிகளின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு தென்காசி மாவட்ட விவசாயிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தனர். பின்னர் கூட்டம் முடிந்ததும் அவர்கள் கலைந்து சென்றனர்.
கூட்டத்தில் 2023 -2024 -ம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, கரும்பு மற்றும் எண்ணெய் வித்து போன்றவை குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்- உழவர் நலத்துறை மூலம் ஒரு விவசாய குடும்பத்துக்கு 2 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.91 ஆயிரத்து 742 மதிப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. மேலும் தரிசு நில தொகுப்புகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க அரசாங்கத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் அறிவுறுத்தல்
மொத்தம் வழங்கப்பட்ட 158 மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், வேளாண் துணை இயக்குனர் ஊமைத்துரை, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.