< Back
மாநில செய்திகள்
கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு

தினத்தந்தி
|
17 March 2023 6:45 PM GMT

குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் வராததை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் வராததை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர் கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜசேகர் தலைமையில் நடந்தது. அப்போது விவசாயிகள் பருவமழை பொய்த்து போனதால் இழப்பீடு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு தொகை கிடைப்பது தொடர்பாக உறுதியான பதில் கிடைக்க வேண்டும். அதற்கு கலெக்டர் பதிலளிக்க வரவேண்டும் என்று தெரிவித்தனர்.

கலெக்டர் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்த போது விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலெக்டர் எவ்வளவு நேரம் ஆனாலும் வரட்டும் அதுவரை காத்திருக்கிறோம். அவர் வந்தவுடன் கூட்டம் தொடங்கட்டும் என்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பினர்.

வெளிநடப்பு

இவ்வாறு நீண்டநேரம் சென்ற நிலையில் அதிகாரிகள் கலெக்டர் உடல் நலக்குறைவால் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும், நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்றும், விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு தெரிவித்து உரிய நிவாரணம் கிடைக்க செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் கலெக்டர் தொடர்ந்து எங்களின் குறைதீர் கூட்டங்களை புறக்கணித்து வருவதாக கூறி அதனை கண்டித்து விவசாயிகள் அனைவரும் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக கூறி எழுந்தனர். மேலும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நிவாரணம்

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் நெல் விவசாயம் அடியோடு கருகிபோனது. டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜனவரி மாதமே ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருபோகம் மட்டுமே விளையும் விவசாயிகளுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெரியவில்லை. இதுதவிர கலெக்டர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

வறட்சி மாவட்டம்

உடனடியாக எங்களுக்கு தமிழக அரசு நெல் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து அதற்கான நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள அனைவருக்கும் முழுமையான நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினார். மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை ஒட்டுமொத்த விவசாயிகளும் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்