பெரம்பலூர்
கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
|கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள், கரும்பு விவசாயிகளுடான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆலை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:- 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவ சீசனில் இதுவரை 86 ஆயிரத்து 650 குவிண்டால் அரைக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை இருப்பு 1 லட்சத்து 11 ஆயிரத்து 470 குவிண்டால் உள்ளது. மொலாசஸ் 4 ஆயிரத்து 517 டன் உள்ளது. 2 லட்சத்து 75 ஆயிரம் டன் கரும்பு அரைக்க வேண்டியுள்ளது. 2023-24-ம் ஆண்டுக்கான கரும்பு 3 லட்சத்து 90 ஆயிரம் டன் அரைக்க 13 ஆயிரம் ஏக்கர் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரம் ஏக்கர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. எத்தனால் உற்பத்திக்கு ஆய்வு செய்வதற்கு "நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி" நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
டெண்டரில் முறைகேடு
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:- பங்குதாரர்களுக்கு 4 கிலோ சர்க்கரை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க மத்திய-மாநில அரசுகளை ஆலை அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்க கூடுதல் விதிமுறைகள் விதிக்கும் அகரம்சீகூர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர், இதில் ஆலை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலாளி, ரோப் மாட்டும் டெண்டரில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்.
இணை மின் உற்பத்தியை 15 மெகா வாட்டாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையை, கரும்பு அரவை சர்க்கரை ஆலை என பெயர் மாற்ற வேண்டும். தற்காலிக பணியாளர்களை இட ஒதுக்கீடு அளவில் நியமிக்க வேண்டும். கரும்பு உற்பத்தியை பெருக்க களப்பணியாளர்களுக்கு சம்பளமும், பெட்ரோல் அலவன்சும் கூடுதலாக வழங்க வேண்டும்.
முகவரி மாற்றம்
வேட்டக்குடி கோட்டத்தை 2 ஆக பிரித்து கரும்பு உற்பத்தியை பெருக்க வேண்டும். பங்குதாரர்களுக்கு வாரிசு மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு பெருக்கத்தை ஆண்டுக்கு 5 லட்சம் டன் அரைக்கவும், 6 மாதத்திற்கு அரவை காலத்தை கூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை வளாகத்தில் எத்தனால், ஸ்பிரிட் மற்றும் காகித ஆலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை லாரி யார்டில் தார் போட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் சர்க்கரை ஆலையின் அதிகாரிகள், கரும்பு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், பங்குதாரர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.