தஞ்சாவூர்
சம்பா பயிர்களை தாக்கும் மஞ்சள் நோய் விவசாயிகள் கவலை
|மெலட்டூர் அருகே சம்பா பயிர்களை மஞ்சள் நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மெலட்டூர் அருகே சம்பா பயிர்களை மஞ்சள் நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
3 போக சாகுபடி
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதற்காக மேட்டூரில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். வழக்கம்போல் இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே அதாவது மே மாதமே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை பயிரிட்டனர். ஆனால் இடையிடையே மழை பெய்ததால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் குறுவை அறுவடை நேரத்தில் மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டது. குறுவையை தொடர்ந்து தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.
மஞ்சள் நோய் தாக்குதல்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர், பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து உள்ளனர். மெலட்டூர் அருகே நரியனூர் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தற்போது வளர்ந்து வரும் பருவத்தில் உள்ளது.
இந்த நிலையில் சம்பா நெற்பயிர்களை தற்போது மஞ்சள் நோய் எனப்படும் புதுவிதமான நோய் தாக்கி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். நோய் தாக்குதல் காரணமாக பயிர்கள் நுனிசிவந்து கருகி வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கட்டுப்படுத்த முடியவில்லை
வேகமாக பரவி வரும் இந்த நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு யுத்திகளை கையாள வேண்டும். மருந்துகளை தெளித்தும், அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதனால் விவசாயிகள் சம்பா பயிர்களை காப்பாற்ற கடுமையாக போராடி வருகின்றனர். மஞ்சள் நோய் தாக்கிய பயிர்களை காப்பாற்ற அரசு வேளாண் அலுவலர்களை கொண்ட குழுவை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி மஞ்சள் நோயை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.