தஞ்சாவூர்
மழையால் தீவனப்புல் சாகுபடி பாதிப்பு
|கும்பகோணம் பகுதியில் மழையால் தீவனப்புல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கும்பகோணம் பகுதியில் மழையால் தீவனப்புல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தீவனப்புல் சாகுபடி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் தீவன புல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தீவனப்புல்லை அதிகமாக வாங்குகிறார்கள். எனவே கும்பகோணம் பகுதியில் தீவனப்புல்லுக்கு நல்ல மவுசு காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தீவனப்புல் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் வேர்கள் அழுகி தீவனப்புல் வளர்ச்சி இல்லாமல் வீணாகி வருகிறது.
மழையால் சேதம்
இதனால் தீவனப்புல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மழையில் சேதம் அடைந்தது போக எஞ்சி உள்ள தீவனப்புல்லை பாதுகாக்க விவசாயிகள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக தீவனப்புல் சாகுபடி நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றி வேர்களில் மண் அணைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கும்பகோணத்தை அடுத்த ஆரியபடையூர் பகுதியில் தீவனப்புல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் 5 ஏக்கர் பரப்பளவில் தீவனப்புல் சாகுபடி செய்து வருகிறோம். நகரப் பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானோர் தங்களது கால்நடைகளுக்கு இயற்கையாகவே ஊட்டச்சத்து அளிக்கும் தீவனப்புல்லை தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.
இழப்பீடு
இதனால் தீவனப்புல் சாகுபடி மற்றும் பராமரிப்புக்கு ஆகும் செலவு போக கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தீவனப்புல் சாகுபடி செய்துள்ள நிலங்களில் மழைநீர் புகுந்து வடிகால் வசதி இல்லாமல் தேங்கி நிற்கிறது.
இதனால் தீவனப்புல் வேர்கள் அழுகி பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது. மேலும் தற்போது புதிதாக முளை விட்டு வரும் பயிர்களும் மழை நீரில் முழுவதுமாக மூழ்கி சேதமடைந்துள்ளன. மழை பாதிப்பு காரணமாக தீவனப்புல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள எங்களை போன்ற விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. நெல் உள்ளிட்ட பயிர்களில் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கிய அரசு இதுபோன்று மாற்றுப் பயிர் சாகுபடியில் ஏற்படும் பாதிப்புகளையும் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.