< Back
மாநில செய்திகள்
கிராம நிர்வாக அலுவலகம் முன்புவிவசாயிகள் தர்ணா
திருவாரூர்
மாநில செய்திகள்

கிராம நிர்வாக அலுவலகம் முன்புவிவசாயிகள் தர்ணா

தினத்தந்தி
|
11 Nov 2022 12:45 AM IST

பயிர்க்காப்பீடு செய்ய சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து கோட்டூர் அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பயிர்க்காப்பீடு செய்ய சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து கோட்டூர் அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பயிர்க்காப்பீடு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது சம்பா மற்றும் தாளடி நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையும் தீவிரமடைந்து டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மழை போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய -மாநில அரசுகள் சம்பா மற்றும் தாளடி பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

சான்றிதழ் வழங்க தாமதம்

வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பயிர்க்காப்பீடு செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பயிர்க்காப்பீடு செய்வதற்கு விவசாயிகளின் நிலத்தின் பட்டா, சிட்டா மற்றும் சர்வே எண் போன்ற விவரங்களை அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

இதற்காக கோட்டூர் அருகே வாட்டார் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கடந்த 15 நாட்களாக வாழச்சேரி, செல்லத்தூர், வாட்டார் தெற்கு, வாட்டார் வடக்கு ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சென்று வருகின்றனர்.

தாசில்தாரிடம் புகார்

இந்த நிலையில் அந்த பகுதியின் கிராம நிர்வாக அலுவலர், அலுவலகத்துக்கு வந்து ஒரு சிலருக்கு மட்டும் சான்றிதழ் வழங்கி விட்டு திரும்ப சென்று விடுவதாகவும், பல நாட்கள் அலுவலகத்துக்கு வருவதில்லை என ஊராட்சி தலைவர் தங்கராசு மற்றும் விவசாயிகள் மன்னார்குடி தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்து இருந்தனர்.

பயிர்க்காப்பீடு செய்ய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வாட்டார் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரை எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் நேற்று மதியம் வரை அவர் வராததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், களப்பால் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் அங்கு சென்று ஒன்றியக்குழு உறுப்பினர் காசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். விவசாயிகளின் திடீர் ேபாராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்