< Back
மாநில செய்திகள்
நெல் கொள்முதல் பணிகள் பாதிப்பு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் பணிகள் பாதிப்பு

தினத்தந்தி
|
3 Nov 2022 2:14 AM IST

மெலட்டுர் பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மெலட்டுர் பகுதியில் தொடர் மழை காரணமாக நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

விவசாயிகள் அவதி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டனர். இதில் குறுவை சாகுபடி நிறைவடைந்து விட்டது. சம்பா, தாளடி பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர் மழை காரணமாக குறுவை பருவத்தில் கிடைத்த நெல் மகசூலில் இருந்து விவசாயிகள் லாபம் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். மழையில் நெல் நனைந்து வீணாவதும், அதை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.

பரவலாக மழை...

தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்ட பகுதிகளில பரவலாக மழை பெய்து வருகிறது. மெலட்டூர் அருகே வையச்சேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல்நிலையத்தில் உடனடியாக விற்பனை செய்ய முடியாமல் பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் வையச்சேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை பின்பருவத்தில் நடவு செய்த நெற்பயிர்களை அறுவடை செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்முதல் பணி பாதிப்பு

இந்த பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வையச்சேரி அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்கு கொட்டி வைத்துள்ளனர். ஆனால் தொடர் மழையின் காரணமாக நெல்கொள்முதல் செய்யும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை நீடித்தால் மூடிவைத்துள்ள நெல்லின் நிறம் மங்கி நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்