தஞ்சாவூர்
ஈரப்பதத்தை கணக்கிடாமல் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள்
|கூடுதல் பணியாளர்களை நியமித்து ஈரப்பதத்தை கணக்கிடாமல் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் பணியாளர்களை நியமித்து ஈரப்பதத்தை கணக்கிடாமல் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காய வைக்கும் பணி
பூதலூர் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. நேற்று வெயில் அடித்தது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை சாலையோரங்களிலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் காய வைத்தனர். புதிதாக அறுவடை செய்யப்படும் நெல்லையும் டிராக்டர் மூலம் கொண்டு வந்து சாலைகளில் கொட்டி காயவைக்கும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்று வந்தது. வெயில் அடிக்கும் நேரத்தை பயன்படுத்தி கூடுதல் எந்திரங்களை வயலில் இறக்கி அறுவடை செய்வதற்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களில் பணிகள் வேகமாக நடப்பதில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
ஈரப்பதம் கணக்கிடாமல்...
இதுகுறித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கூறுகையில், 'தற்போதுள்ள சூழ்நிலையில் மழை பெய்வதால் விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மழையில் நனைந்த நெல்லை காய வைப்பதற்கு கூடுதலாக செலவு செய்து வருகிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்' என்றார்.
பூதலூரை சேர்ந்த விவசாயி பாலதண்டாயுதபாணி:-
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 800 முதல் 1000 சிப்பம் கொள்முதல் செய்தால் போதும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் கூடுதலாக விவசாயிகளின் நெல் குவிந்து கிடக்கிறது.
கூடுதலாக பணியாளர்கள்...
கூடுதலான பணியாளர்களை நியமித்து நெல்லை கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும். பூதலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாதுகாப்பான முறையில் நெல் மூட்டைகளை பாதுகாக்க 3-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய கிடங்குகள் உள்ளன. இவை காலியாக உள்ளன. அவற்றை பயன்படுத்துவது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழகம் உடனடியாக ஆய்வு செய்து பூதலூர், கோவில் பத்து, அய்யனாபுரம், விண்ணமங்கலம் உள்ளிட்ட அருகாமை கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பூதலூரிலேயே சேமித்து வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.