அரியலூர்
வயலில் சுற்றித்திரிந்த முதலையை தூணில் கட்டிப்போட்ட விவசாயிகள்
|மீன்சுருட்டி அருகே வயலில் சுற்றித்திரிந்த முதலையை விவசாயிகள் தூணில் கட்டிப்போட்டனர். பின்னர் வனத்துறையினர் அதனை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பத்திரமாக விட்டனர்.
வயலில் சுற்றித்திரிந்த முதலை
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குலோத்துங்கநல்லூர் வயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக விவசாயிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது வயலில் ஒரு விதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால் பீதியடைந்த அவர்கள் சுற்றும்முற்றும் பார்த்தனர். அப்போது நெல் நாற்றுக்கு மத்தியில் முதலை ஒன்று இருந்தது.
இதையடுத்து வயலில் சுற்றித்திரிந்த முதலையை விவசாயிகள் சிலர் அங்கிருந்து விரட்டினர். பின்னர் அந்த முதலையை சுருக்கு கயிறு மூலம் லாவகமாக பிடித்து அங்கிருந்த தூணில் கட்டிப்போட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
இதுகுறித்து மீன்சுருட்டி போலீசாருக்கும், மாவட்ட வனத்துறையினருக்கும் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த முதலையை வனத்துறையினர் மீட்டு அணைக்கரை கீழணை பகுதிக்கு எடுத்துச்சென்று கொள்ளிடம் ஆற்றில் பத்திரமாக விட்டனர்.
வயலில் சுற்றித்திரிந்த முதலையை விவசாயிகள் தூணில் கட்டி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.