மதுரை
எலுமிச்சை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை- கிலோ ரூ.8-க்கு விற்பனை
|கிலோ ரூ.8 என எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பேரையூர்,
கிலோ ரூ.8 என எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எலுமிச்சை பழம்
பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, நாகையாபுரம், அத்திபட்டி, சாப்டூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதிகளில் தற்போது 300 ஏக்கர்களில் எலுமிச்சை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அதிக விளைச்சல் ஏற்பட்டும் விலை குறைவாக விற்று வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த கோடை காலத்தில் எலுமிச்சை கிலோ ரூ.120 வரை விற்பனையானது.
ஆனால் தற்போது கிலோ ரூ.10-க்கு விற்பனையாகி வருகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் அதிக விசேஷங்களும் பண்டிகைகளும் இல்லாததால் எலுமிச்சை பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் எலுமிச்சை விற்பனை கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை ரக வாரியாக விற்பனையாகி வருகிறது. எலுமிச்சை விளைச்சல் அதிகமாக உள்ளதால் விலையும் குறைவாக உள்ளது.
ரூ.8-க்கு விற்பனை
இதுகுறித்து பேரையூர் எலுமிச்சை விவசாயி சையது அபுதாகிர் கூறும்போது, எலுமிச்சை விளைச்சல் அதிகமாக உள்ளது, இதனால் விலை குறைவாக விற்பனையாகி வருகிறது. மரத்திலிருந்து எலுமிச்சை பறிக்கும் கூலி, வண்டி வாடகை, கமிஷன் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் வரவை விட செலவு அதிகமாக உள்ளது. தரைக்காற்று வேகமாக வீசுவதால் மரத்திலிருந்து எலுமிச்சை உதிர்ந்து விடுகிறது. அதை சேகரித்து விற்பனைக்கு கொண்டு செல்லும்போது கிலோ ஒன்றுக்கு ரூ.5-க்கு தான் வாங்குகின்றனர். தரமான பழம் கிலோ ரூ.8 வரை விற்பனையாகிறது என்றார்.
எலுமிச்சை வியாபாரி காளியப்பன் கூறும்போது, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எலுமிச்சை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ஆடி மாதம் என்பதால் கிலோ ரூ.10-க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. விலை குறைவாக உள்ளதால் ஊறுகாய் போடுவதற்கு அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் என்றார்.