< Back
மாநில செய்திகள்
பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் திடீர் போராட்டம்

தினத்தந்தி
|
17 Oct 2023 12:15 AM IST

விடுபட்ட 8 கிராமங்களுக்கு பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர் பாதிப்பு நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறிய மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்துபோனது. இதனை பார்வையிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டை ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இதில் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கடக்கம், அகர ஆதனூர், பெரம்பூர், முத்தூர், அகர வல்லம், கிளியனூர் எடக்குடி, கொடைவிளாகம் ஆகிய 8 கிராமங்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நிவாரணம் வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் தலைவர் கோபிகணேசன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் உள்ளே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை மனு

அப்போது அவர்கள் அளித்த மனுவில் விடுபட்டு போன கிராமங்களுக்கான இரண்டாம் தடவையாக கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவசாயிகளின் சுமார் ஆயிரத்து 170 எக்டேர் நிலங்களுக்கான ரூ.2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 200 தொகையினை ஆயிரத்து 738 விவசாயிகளுக்கு வழங்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பருவம் தப்பிய மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிருக்கான நிவாரணமாக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட எக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் என்பதை 17 ஆயிரத்து 917 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 52 லட்சத்து 72 ஆயிரத்து 830 ரூபாய் வழங்க வேண்டும்.

மேற்கண்ட இரண்டிற்கும் பருவம் தப்பிய மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் மற்றும் பயிர் வகை பயிர்களுக்கு கணக்கெடுப்பின் அடிப்படையில் திருந்திய நிதி ஒதுக்கீடு செய்து வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மாவட்ட கலெக்டர் மகாபாரதி இருக்கையில் இருந்து எழுந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்