< Back
மாநில செய்திகள்
நானோ யூரியாவை பயன்படுத்த விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது-குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

நானோ யூரியாவை பயன்படுத்த விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது-குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
24 July 2022 5:01 PM GMT

நானோ யூரியாவை பயன்படுத்த விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நானோ யூரியாவை பயன்படுத்த விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. விவசாய இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர் சேக்அப்துல்லா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நானோ யூரியா திரவத்தின் பயன்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

அப்போது, ஒரு பாட்டில் நானோ யூரியா ஒரு மூடை யூரியா போடுவதற்கு சமம் என்றும், இதனை இலை வழியாக தெளிக்கும்போது தாவரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதால் நல்ல வளர்ச்சி ஏற்படுகிறது. இதன்காரணமாக சாதாரண யூரியா போன்று மண்வளம் பாதிக்காமல் மண்வளம் காக்கப்படுகிறது என்று அதன் பயன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. அப்போது விவசாயிகள் நானோ யூரியாவை பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காக யூரியா உரத்தினால் மண்வளம் பாதிக்கப்படுவதாக தகவலை பரப்பி அதன் உபயோகத்தை மறைமுகமாக தடுக்க கூடாது. 4 தலைமுறைகளாக யூரியா உரம் பயன்படுத்துகிறோம் எந்த மண் வளமும் பாதிக்கப்படவில்லை. நீங்கள் யூரியா சப்ளை செய்ய முடியவில்லை என்பதற்காக நானோ யூரியா வாங்குவதற்காக இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசுக்கு வருவாய் இழப்பு

பின்னர் விவசாயிகள் பேசும் போது, கடலாடி அருகே வேப்பங்குளம் பகுதியில் அரசு மணல்குவாரி அமைக்கப்பட்டுள்ளது. அதில் விதிமுறைகளின்படி பதிவு செய்து மணல் அள்ளுவதற்கு பதிலாக தனியார் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு இரவு பகலாக மணல் அள்ளி வருகின்றனர். இதனால் நீர்ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எங்கள் கண்முன்னே வளங்கள் சூறையாடப்படுகிறது. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி தனியார் வளம்கொழிக்கும் அந்த மணல் குவாரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாவட்டத்தில் வரத்து கால்வாய்களில் முட்செடிகள், நாணல்களை அகற்ற வேண்டும். உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து தகவல் தெரிவித்தால் அதன் விவரம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு எங்களை தாக்க வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர்.

8 சதவீத கமிஷன்

மாவட்டத்தில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் வியாபாரிகள் 4 சதவீத கமிஷன் தொகைக்கு பதிலாக 8 சதவீத கமிஷன் பிடித்தம் செய்கின்றனர். இதுதொடர்பாக நடந்த சமரச கூட்டத்தில் 6 சதவீத கமிஷன் மட்டுமே பிடித்தம் செய்ய முடிவான நிலையில் மீண்டும் 8 சதவீதம் பிடித்தம் செய்கின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

வியாபாரிகள் கமிஷன் பிடிப்பது தொடர்பாக நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால் விவசாயிகள் ஆத்திரமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் பொறுப்பில்லை என்று தட்டிக்கழிக்க கூடாது என்று ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விவசாயிகளின் கோரிக்கைளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்