நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தல்
|நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தி உள்ளார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தி உள்ளார்.
அங்கக வேளாண்மை கூட்டம்
மாவட்ட அங்கக வேளாண்மை செயற்குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில், அங்கக வேளாண்மை திட்டத்தினை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் துறை அலுவலர்கள், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள், மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுடன் அங்கக வேளாண்மைக்கான கலந்துரையாடல் மற்றும் அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகளின் தேவைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தோட்டக்கலை பண்ணைகளிலும் அங்கக வேளாண்மைக்கான ஒரு செயல் விளக்கத்திடல் அமைக்க வேண்டும். அந்த திடலில் நிகழும் அனைத்து செயல்பாடுகளும் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் கள அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் அங்கக வேளாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை
நுண்ணுயிர் உரம், நுண்ணுயிர் எதிரிகள், மற்றும் இதர அங்கக இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து, பண்ணை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அந்தந்த பண்ணை அலுவலர்கள் தங்கள் பண்ணையில் உற்பத்தி செய்பவருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
அங்கக இடுபொருட்கள் உற்பத்தியை பண்ணைகளில் அதிகப்படுத்த வேண்டும். இதேபோல் அங்கக வேளாண்மை இடுபொருள் தயாரித்தல் குறித்து மாவட்ட அளவிலான மேளா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.