விழுப்புரம்
விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்
|ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-
திருவாமாத்தூர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும். விவசாய பயன்பாட்டுக்காக ஏரிகளில் வண்டல் மண் எடுக்க உடனடியாக ஆவனசெய்ய வேண்டும். வேளாண் விற்பனை சங்கங்களில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதைகளை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு தடையின்றி வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு வாதநோய் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் பணப்பட்டுவாடா
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். விழுப்புரம், விக்கிரவாண்டி போன்ற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 20 நாட்களாக பணப்பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது. அவற்றை விரைந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதிலளித்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் பேசுகையில், எந்த நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வண்டல் மண் பெற அந்தந்த தாசில்தாரிடமே விண்ணப்பம் செய்து உத்தரவு பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் தாமாக முன்வந்து வண்டல் மண் எடுக்கும்போது ஒரே இடத்தில் பள்ளமாக தோண்டி மண் எடுக்காமல் பரவலாக மண் எடுக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் நிலத்தையும் மேம்படுத்துங்கள், ஏரியையும் தூர்வார உதவி செய்யுங்கள். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.