< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
17 Jan 2023 12:59 AM IST

கடலாடி தாலுகா முழுவதும் வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கவுன்சிலர் நவஜோதி பிரவீன்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாயல்குடி,

கடலாடி தாலுகா முழுவதும் வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கவுன்சிலர் நவஜோதி பிரவீன்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நெல் விவசாயம்

கடலாடி தாலுகாவில் சிக்கல், இதம்பாடல், கடலாடி, சாயல்குடி, இருவேலி, எஸ்.புல்லந்தை, எஸ்.கீரந்தை, பிள்ளையார்குளம், காணிக்கூர், நோம்பக்குளம், எஸ்.வாகைகுளம், ஆலங்குளம், வேடக்கரிசல்குளம், எம். கரிசல்குளம், மீனங்குடி, சேரந்தை, சேனாங்குறிச்சி, தனிச்சியம், கொத்தங்குளம், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வந்தனர்.

இப்பகுதியில் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழை பெய்தால் மட்டுமே கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் நிலை இருந்து வருகிறது.இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் கண்மாய்கள் அனைத்தும் வறண்டு போயின.2,3 முறை பெய்த மழையால் விவசாயிகள் விதைப்பு, களையெடுப்பு, உரம் இடுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடித்தனர். மழை பெய்யாமல் போனதால் நெற்பயிர்கள் கருகி மடிந்து போயின.

பயிர் இழப்பீடு

இதை தொடர்ந்து கண்கலங்கிய இப்பகுதி விவசாயிகள் கால்நடைகளுக்காக அதற்கும் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1700 கொடுத்து அறுவடை எந்திரம் மூலம் கருகிய நெற்பயிர்களை அறுவடையை செய்து வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயம் செய்து வந்தனர். தற்போது கடன்களை கட்டுவதற்கு கால்நடைகளை இப்பகுதி விவசாயிகள் விற்கும் அவல நிலையில் உள்ளனர். வருங்காலங்களில் இப்பகுதிகளில் உள்ள வரத்து கால்வாய்களை சீர் செய்து ஒருபோக நெல் விவசாயத்திற்கு இப்பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகையில் இருந்து வரும் தண்ணீர் இங்குள்ள கண்மாய்களுக்கு வரும் பட்சத்தில் மழையே பெய்யாவிட்டாலும் ஒருபோக நெல் விவசாயம் கிடைக்கும். வரத்து கால்வாய்களில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதியில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி இப்பகுதி வறட்சி பகுதியாக அறிவிப்பதோடு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகையை விரைந்து வழங்க தமிழக அரசிடம் இருந்து நிதியை பெற்று தர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கலெக்டரிடம் கோரிக்கை

இது குறித்து மேலும் மாவட்ட கவுன்சிலர் நவஜோதி பிரவீன்குமார் கூறுகையில்:-

கடலாடி பகுதி மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை மிகக்குறைவாக பெய்துள்ளதால் விவசாயிகள் பெரும் துயரம் அடைந்துள்ளனர். நெற்பயிர்கள் விளைச்சல் இன்றி கருகிவிட்டதால் மத்திய அரசின் சார்பில் பயிர் காப்பீடு தொகையும் மாநில அரசின் மூலம் வறட்சி நிவாரணமும் வழங்கிட மாவட்ட ஊராட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள் கோரிக்கை மனு வழங்கி உள்ளோம் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்