< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
கடலூர்
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

டெல்டா பகுதியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடலூரில் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

பூணூல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நந்தனார் பிறந்த கடலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி முன்னிலையில் ஆதிதிராவிட மக்களுக்கு பூணூல் அணிவித்தது கேவலமான செயல். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நந்தனார் வந்த போது, அவரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் எரித்து விட்டனர்.

ஆனால் அவர் பிறந்த ஊரில், பட்டியல் இனத்தை சேர்ந்த மக்களுக்கு பூணூல் அணிவிப்பது என்பது பூணூலை புனிதபடுத்துவதும், மனுவாத கருத்தியலை நியாயப்படுத்தக்கூடிய மோசமான செயல். மீண்டும் ஒருமுறை நந்தனாரை தீயிட்டு கொளுத்தியதற்கு சமம்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது தான் சனாதனம் என்று வள்ளலார் கூறியிருக்கிறார். ஆனால் கவர்னர், சனாதனத்தையும் புரிந்து கொள்ளவில்லை, வள்ளலாரையும் புரிந்து கொள்ளவில்லை.

ரூ.35 ஆயிரம் இழப்பீடு

பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை தமிழக அரசு ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் போதே, புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் நிலத்தை 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மோசடியாக தங்களது குடும்பங்களுக்கு கிரயம் செய்துள்ளார்கள். இப்படி இருக்கும் போது, இந்து ஆலயத்தை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூறுவதை ஏற்க முடியாது.

டெல்டா பகுதிகளில் 2 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாநில அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 இழப்பீடு அறிவித்து இருக்கிறது. இந்த இழப்பீட்டை ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

போராட்டம்

டெல்லியில் நீண்ட காலமாக இயங்கி வந்த தனியார் செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளனர். பிரதம மந்திரி நல நிதிக்கு 2 மாதங்களில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு பணம் வந்தது குறித்து செய்தி வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இது கண்டிக்கத்தக்கது.

ஊடக சுதந்திரத்தை பறிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து பாதிரிக்குப்பம் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

மேலும் செய்திகள்